Friday, August 3, 2012

விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில்கள்

                                  <வரவேற்கும் விநாயகர்>
 ஆவல்சூரன்பட்டி கிராமம் சில ஆண்டுகளுக்கு முன் அழகாக நாற்புறமும் ஆங்காங்கு சிறு மண் மேடுகளுடன் அகழி சூழ்ந்த கிராமமாகத் தோற்றமளித்தது. தற்போது காலத்தின் கோலத்தால் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணிர் வரத்து குறைந்து சற்று வரண்டு காட்சியளிக்கிறது. ஆனாலும் தெய்வீக உணர்வு அன்று முதல் இன்று வரை குறையவில்லை.

மேற்கில் நுழை வாயிலில் சாலையின் இடது புறம் விநாயகர் கற்கோவில் பளிச்சென காட்சியளிக்கும். முன்புறம் அழகிய நிழல் தரும் வேம்பு மரங்கள் உள்ளன. கிராமத்திற்கு வருவோர் விரும்பினால் இந்த நிழலில் சற்று ஓய்வெடுத்துச் செல்லலாம். எண்ணி வரும் காரியம் நன்கு முடிய விநாயகரை வணங்கிச் செல்லும் காட்சி தினமும் காணலாம்.  கிராமத்தில் உள்ளோர் எந்த ஒரு காரியமானாலும் இவ்விநாயகரை வணங்கியபின்தான் தொடங்குவார்கள். பிற கோயில் விழாவானாலும் விநாயகருக்கு தேங்காய், பழம், பொரி படைத்து பரிவட்டம்  கட்டி வணங்கி உத்தரவு பெற்று செல்வது வழக்கம்.   


வருடத்தில் ஒருநாள் விநாயகருக்கு வியாயகர் சதுர்த்தியன்று சிறப்பு வழிபாடு உண்டு. அழகிய சப்பரத்தில் விநாயகர் ஊர்வலம் வருவதை இவ்வூர் இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். எனவே இவ்வூருக்கு என்னென்றும் விநாயகரின் அருளும் ஆசியும் உண்டு.

ஆனாலும் விநாயகர் கோவிலில் விநாயகர் முன்னிலையில் திருமண நிகழ்ச்சி நடப்பதிலை. காரணம் விநாயகர் திருமணமாகாதவர் என்றும் அவரோ பாவம் அருகிலுள்ள குளத்தில் அல்லது கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும் பெண்களில் அவரது தாயைப்போல் அழகான பெண் தேடும் பாவணையில் குளக்கரையில் அமர்ந்திருக்கிறார் என்றும் அவர் எப்படி புது மணமக்களை ஆசிர்வதிப்பார் என்றும் எண்ணுவதுண்டு. எதுவானாலும் சில மணமக்கள் விநாயகரின் ஆசி வேண்டி சிதரும் தேங்காய் உடைத்து செல்வது உண்டு.                                                         
                                                   
                        <காக்கும் காளியம்மன்>
ஆவல்சூரன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் மிகவும் துடியான தெய்வம். வந்தோரை வாழவைக்கும் அம்மன். தாயுள்ளம் மிக்கவள். ஊராரை தன் பிள்ளைகளாகக் கருதி வரமளிப்பவள். 1970-க்கு முன் கோவில் சற்று சிதைந்திருந்தது. வெங்கிடப்ப ரெட்டியார் மற்றும் அன்னார் மனைவி தம்பதியாருக்கு குழந்தை வாரிசு இல்லாததால் இந்த அம்மனுக்கே தம் சொத்து அனைத்தையும் உடைமையாக்கினர். அன்னாருடைய விருப்பப்படி 1970-ல் முற்றிலும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.1973-ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அன்று முதல் இன்றுவரை வாரபூஜை நடைபெற்று வருகிறது. ஆனாலுல் இன ஒற்றுமை இல்லாத காரணத்தால் பல வருடங்களாக ஆண்டுக்கொரு முறைகூட  விழா எடுக்க முடியாத நிலை. கடுமையான முயற்சிக்குப் பின்னர் 2010-ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனாலும் தற்போது  சுமுகமான நிலை இல்லை.