Friday, August 3, 2012

விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில்கள்

                                  <வரவேற்கும் விநாயகர்>
 ஆவல்சூரன்பட்டி கிராமம் சில ஆண்டுகளுக்கு முன் அழகாக நாற்புறமும் ஆங்காங்கு சிறு மண் மேடுகளுடன் அகழி சூழ்ந்த கிராமமாகத் தோற்றமளித்தது. தற்போது காலத்தின் கோலத்தால் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணிர் வரத்து குறைந்து சற்று வரண்டு காட்சியளிக்கிறது. ஆனாலும் தெய்வீக உணர்வு அன்று முதல் இன்று வரை குறையவில்லை.

மேற்கில் நுழை வாயிலில் சாலையின் இடது புறம் விநாயகர் கற்கோவில் பளிச்சென காட்சியளிக்கும். முன்புறம் அழகிய நிழல் தரும் வேம்பு மரங்கள் உள்ளன. கிராமத்திற்கு வருவோர் விரும்பினால் இந்த நிழலில் சற்று ஓய்வெடுத்துச் செல்லலாம். எண்ணி வரும் காரியம் நன்கு முடிய விநாயகரை வணங்கிச் செல்லும் காட்சி தினமும் காணலாம்.  கிராமத்தில் உள்ளோர் எந்த ஒரு காரியமானாலும் இவ்விநாயகரை வணங்கியபின்தான் தொடங்குவார்கள். பிற கோயில் விழாவானாலும் விநாயகருக்கு தேங்காய், பழம், பொரி படைத்து பரிவட்டம்  கட்டி வணங்கி உத்தரவு பெற்று செல்வது வழக்கம்.   


வருடத்தில் ஒருநாள் விநாயகருக்கு வியாயகர் சதுர்த்தியன்று சிறப்பு வழிபாடு உண்டு. அழகிய சப்பரத்தில் விநாயகர் ஊர்வலம் வருவதை இவ்வூர் இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். எனவே இவ்வூருக்கு என்னென்றும் விநாயகரின் அருளும் ஆசியும் உண்டு.

ஆனாலும் விநாயகர் கோவிலில் விநாயகர் முன்னிலையில் திருமண நிகழ்ச்சி நடப்பதிலை. காரணம் விநாயகர் திருமணமாகாதவர் என்றும் அவரோ பாவம் அருகிலுள்ள குளத்தில் அல்லது கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும் பெண்களில் அவரது தாயைப்போல் அழகான பெண் தேடும் பாவணையில் குளக்கரையில் அமர்ந்திருக்கிறார் என்றும் அவர் எப்படி புது மணமக்களை ஆசிர்வதிப்பார் என்றும் எண்ணுவதுண்டு. எதுவானாலும் சில மணமக்கள் விநாயகரின் ஆசி வேண்டி சிதரும் தேங்காய் உடைத்து செல்வது உண்டு.                                                         
                                                   
                        <காக்கும் காளியம்மன்>
ஆவல்சூரன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் மிகவும் துடியான தெய்வம். வந்தோரை வாழவைக்கும் அம்மன். தாயுள்ளம் மிக்கவள். ஊராரை தன் பிள்ளைகளாகக் கருதி வரமளிப்பவள். 1970-க்கு முன் கோவில் சற்று சிதைந்திருந்தது. வெங்கிடப்ப ரெட்டியார் மற்றும் அன்னார் மனைவி தம்பதியாருக்கு குழந்தை வாரிசு இல்லாததால் இந்த அம்மனுக்கே தம் சொத்து அனைத்தையும் உடைமையாக்கினர். அன்னாருடைய விருப்பப்படி 1970-ல் முற்றிலும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.1973-ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அன்று முதல் இன்றுவரை வாரபூஜை நடைபெற்று வருகிறது. ஆனாலுல் இன ஒற்றுமை இல்லாத காரணத்தால் பல வருடங்களாக ஆண்டுக்கொரு முறைகூட  விழா எடுக்க முடியாத நிலை. கடுமையான முயற்சிக்குப் பின்னர் 2010-ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனாலும் தற்போது  சுமுகமான நிலை இல்லை.

Monday, May 21, 2012

ஆவல்சூரன்பட்டி - வரலாறு

ஆவல்சூரன்பட்டி சுமார் 1500 குடியிருப்புகள் உள்ள ஒரு அழகிய கிராமம். மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கள்ளிக்குடி குறு வட்டம், இந்த  கிராமத்தின் தாய் கிராமம் கொக்கலான்சேரி. இந்த இரண்டிற்கும் தனித்தனி வரலாறு உண்டு. இரு கிராமங்களுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக பரந்த நீர்பிடிப்பு கண்மாய் ஒரு சிறப்பு அம்சம். இப்போது அழகிய அந்த கண்மாய் எங்கே என்று தேடும் வகையில் காலத்தின் சுவடுகளில் தேய்ந்து வறண்ட தோற்றம்தான் காண முடிகிறது.

இந்தப் பரந்த (சுமார் ஒரு கி.மீ பரப்பளவு) கண்மாயில் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் அலைகள் மவுன ராகத்தில் நீர்வாழும் உயிரினங்களை இசைக் கருவிகளாக்கி இனிய கீதங்கள் இசைப்பதை ரசிக்கலாம். இசைப்பதில் இன்பம் கூட்டும் மீன்களோடு உலா வந்து அன்ன நடையில் முத்தமிடுவதுபோல் கொத்திச் செல்லும் நடனத்தை அரங்கேற்றும் கொக்குகளின் கூட்டம் அற்புதம். இந்த கொக்குகளின் ஆதிக்கமே தாய் கிராமத்திற்கு 'கொக்கு உலாவும் சேரி' என்ற பட்டத்தை அளித்ததாக ஒரு வரலாறு.

இதேபோல் செழித்த பூமியாகத் திளைத்த உள் கிராமத்தை அந்த மாயக் கண்ணபிரான் தன் கடைக்கண் அசைப்பில் வீடு தவறாது பசுக்கள் நிறைந்த கிராமமாகக் காணச் செய்தான் என்று இன்றும் வாழும் மூத்தோர் சொல்லக் கேட்கலாம். இதன் காரணமாகவே பசுக்களை வளர்த்த நாயக்கர்கள் வாழ்ந்த கிராமம் (ஆவுலு நாயக்கர் பட்டி) [தெலுங்கு மொழியில் ஆவுலு என்றால் பசுக்கள்] என பெருமிதத்தோடு சொல்லவும் கேட்கலாம். அதுவே பின் நாளில் 'ஆவல்சூரன்பட்டி' என மாறியதாக வரலாறு.

இவ்விரு செவிவழிச் செய்திகளில் ஓரளவு வரலாற்றில் இடம் பிடித்தவை. ஆனாலும் அரசு ஆவணங்களில் இவை குறிப்பிடப்படவில்லை. இந்த அறிமுகத்தோடு ஆவல்சூரன்பட்டி கிராமத்தில் தெய்வீகப் பயணத்தைத் தொடங்கலாமா?        

இக்கிராமம் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, கள்ளிக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து தெற்கே பிரதான சாலையில் 25 கி.மீ தொலைவில் திருமங்கலம், அதற்கும் தெற்கே சிவரக்கோட்டை (9 கி.மீ), அதற்கும் தெற்கே கள்ளிக்குடி (9கி.மீ), அதற்கும் தெற்கே 9கி.மீ தொலைவில் மதுரை மாவட்டத்தின் தெற்கு எல்லை. சரியாக மாவட்ட தெற்கு எல்லையில் பிரதான சாலையில் கிழக்கே பிரியும் சாலையில் 'ஆவல்சூரன்பட்டி விலக்கு' என்ற வழிகாட்டிப் பலகையுடன் சுமார் 1கி.மீ தொலைவில் மரங்கள் சூழ்ந்த கிராமமாக அமைந்துள்ளது.

அவ்வப்போது இந்த பிரிவுச் சாலையில் குறுக்கே கன்னியாகுமரி வரை செல்லும் ரயில் பாதையில் இரயில்கள் வரும்போது பாதுகாப்பு கேட்டில் சற்று நின்று இளைப்பாரிச் செல்ல நேரிடும். ஆனாலும் இளைப்பாறும் நேரம் நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் இருக்காது.    

இதைச் சுற்றியுள்ள கிராமங்கள் நல்லமநாயக்கன்பட்டி, உசிலம்பட்டி, சித்தூர், சேர்வைகாரன்பட்டி, போத்தநதி புதுப்பட்டி, பேராலி, உன்னிபட்டி, பேய்க்குளம் ஆகும்.

மேற்படி ஆவல்சூரன்பட்டியைச் சேர்ந்தவன் என்ற வகையில் அவ்வூரின் இருப்பிடத்தைச் சொல்வதற்கு முக்கிய காரணம் இவ்வூரின் சிறப்பை பிறர் அறிய வேண்டும் என்பதற்காகத்தான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலான்சேரி இரயில் நிலையம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஒன்றிரண்டு ரயில்கள் தவிர எல்லா வண்டிகளும் நின்று இருபக்கம் செல்லும் பயனிகளை ஏற்றி இறக்கிச் செல்லும் நிலையமாகத் திகழ்ந்தது. காலப்போக்கில் உள்ளூர் பஸ் வசதிகள் அதிகரித்து விட்டதால் இரயில் நிலையம் ரத்து செய்யப்பட்டு கட்டிடம் இருந்த இடம் சுவடு தெரியாமல் மறைந்து விட்டது. தற்போது வடக்கில் கள்ளிக்குடியிலிருந்தும் தெற்கில் விருதுநகரிலிருந்தும் இவ்வூர் வழியாக உன்னிபட்டி, பேய்க்குளம் செல்லும் பஸ்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.