Wednesday, July 17, 2013

கிருஷ்ணர் வழிபாடு தொடங்கிய வரலாறு

ஆவல்சூரன்பட்டி (Avalsuranpatti) என்றாலே கிருஷ்ணன் கோவில் திருவிழாதான் இவ்வூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நினைவில் வரும். எல்லா இனத்தாரும் பாகுபாடின்றி வழிபாடு செய்வது அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. அன்று முதல் திரு க.தி.ராமசாமி ரெட்டியார் முயற்சியால் அன்னார் தனது பட்டா இடத்தில் கிருஷ்ணன் படத்தை சுவற்றில் மாட்டி பின்னர் அதையே ஒரு பெட்டியில் வைத்து அதன் பின் கட்டிடம் உருவாகி கோபுரமாகி இன்று கம்பீரமாக காட்சியளிக்கிறது.

ஆவல்சூரன்பட்டியில் கண்ணன் கோவில் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது. 1910 -ம் ஆண்டு இவ்வூரில் கிருஷ்ண பெருமான் ஒரு சிறு ஃபோட்டோ படமாக ஊரின் வடபுறமுள்ள ஒரு சாவடியில் (பலர் கூடும் பொது இடம்) பிரதிஷ்டை ஆனான்.  இன்றோ ஊரார் அனைவரும் கொண்டாடும் தெய்வமாக அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டான்.

ஊரின் வடபுறம் ஒரே பங்காளிகள் என்று சொல்லும் வண்ணம் ஒரு பத்து குடும்பங்கள் வாழ்ந்து வந்த நாட்களில் ஒரு நாள் இரவு நடந்த நிகழ்வு இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைக்கவில்லை. இதோ அந்த நிகழ்வின் விபரம்:

ஒரு நாள் இரவு சுமார் பத்து மணி. யாரோ ஒரு சாது கால் போன போக்கில் நடந்து வந்து நேரமாகையால் விளக்கொளி கண்டு இவ்வூரை நோக்கி வந்தார். ஊரின் வடபுறம் ஒரு பொது திண்ணை இருப்பதை அறிந்து இரவு ஓய்வெடுத்து செல்லும் நோக்கத்துடன் வந்தார். பசி வயிற்றைக் கிள்ளினாலும் சாதுவாயிருந்து வரும் பழக்க தோஷத்தால் பசியடக்கி அந்தப் பொது திண்ணையில் படுக்க  துண்டை விரித்தார். புதிய முகம் கண்டு அங்குள்ளோர் யாது எங்கனமென வினவினர். சாதுவோ தன் கால்போகும் திசைப் பயணத்தைப் பற்றி கூறினார்.

அந்த நட்பின் ஆழத்தில் வயிற்றைக் கிள்ளும் பசிக்கு ஏதாவது உணவு கிடைக்குமாவெனக் கேட்டார். நாராயண ரெட்டியார் குமாரர் ராமசாமி சுமார் பதினெட்டு வயது இளைஞன் தன் இல்லத்தரசியிடம் கூற, இரண்டும் கெட்டான் நேரத்தில் மண்பானையில் கொஞ்சம் கேழ்வரகுகூழ் இருப்பதாகக் கூறினார். பரவாயில்லையென அந்த அம்மையார் அளித்த கேழ்வரகு கூழை அமுதமாக உண்டபின் இரவு நேரமாகையால் படுக்க ஒரு கோரைப்பாயும் பெற்று அந்த திண்ணைச் சாவடியில் படுத்து உறங்கினார்.

மீண்டும் காலையில் பிறருக்கு தொல்லை தர வேண்டாமெனக் கருதினாரோ என்னவோ யாரிடமும் சொல்லாமல் அதிகாலையில் பாயை மடித்து வைத்து விட்டு மாயமாய் மறைந்து  விட்டார். விடிந்ததும் அந்த சாதுவைக் காணாமல் போனாலும் பாயின் மீது அட்டையில் ஒட்டிய ஒரு கிருஷ்ணர் படம் இருக்கக் கண்டார். அந்த படத்தின் கீழ் "இந்தப் படத்தை  திண்ணையின் சுவற்றில் தொங்க விட்டு அந்த மாயக் கண்ணனை வணங்கி வரவும்" என்ற வாசகங்கள். அன்று ஒரு சனிக்கிழமை. அன்றே அந்தப் படம் அந்த மடத்தின் வடக்கு சுவற்றில் அலங்கரிக்கத் தொடங்கியது.

அன்று முதல் இன்றும் ஒவ்வொரு சனிக் கிழமையன்று வார பூஜை தவறாது நடந்து வருவது சிறப்புக்குறியது. தவிர கோகுலாஷ்டமி அன்று பக்தர்கள் பலர் பொங்கல் வைத்து கிருஷ்ணன் பிறந்ததை பஜனை வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதம் ஒவ்வொரு வாரமும் பொங்கல் வைத்து வழிபாடு நடை பெறுகிறது. மூன்றாவது வாரம் காப்பு கட்டுதல் என விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யப்படுகிறது. நான்காவது வாரம் சுவாமி ஊர்வலத்துடன் உறியடி திருவிழா இன்றும் நடை பெற்று வருவது சிறப்புக்குறியது.  

இன்று அந்த மடம் ஒரு கோபுரமாகி வழிபாட்டு ஸ்தலமாகி விட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment